Indian Railways News => Topic started by railgenie on May 22, 2013 - 20:00:06 PM


Title - சேலம்-கரூர் ரெயில் பாதையில் 25-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் இயக்கம்
Posted by : railgenie on May 22, 2013 - 20:00:06 PM

சேலம், மே. 22-

சேலம்-கரூர் ரெயில் பாதையில் வருகிற 25-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது.

சேலத்தில் இருந்து கரூர் வழியாக தென் மாவட்டங்களுக்கு ரெயில் இயக்க வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த திட்டம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

ஆரம்பத்தில் இந்த திட்ட மதிப்பீடு குறைவாக இருந்தது. பின்னர் இந்த திட்டம் ஆண்டு கணக்கில் நடந்து வந்ததால் அதன் மதிப்பு ரூ. 800 கோடியாக அதிகரித்தது.

சேலம்-கரூர் ரெயில் பாதையில் தேவையான இடங்களில் மேம்பாலங்கள், சிக்னல்கள், ரெயில்வே நிலையங்கள், பொதுமக்கள் வந்து செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேலும் இந்த வழித்தடத்தில் முதலில் சரக்கு ரெயில் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் பயணிகள் ரெயில் சோதனையும் நடத்தப்பட்டது. அனைத்து பணிகளும் முடிந்து தயார் நிலையில் இருந்த இந்த வழித்தடத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பயணிகள் ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட படி ரெயில் இயக்கப்படவில்லை.

இதையடுத்து பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் ரெயில்வே அமைச்சகம், மற்றும் தென்னக ரெயில்வே பொதுமேலாளர், மற்றும் சேலம் கோட்ட மேலாளர் ஆகியோரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் நேற்று தி.மு.க.எம்.பி. கே.பி. ராமலிங்கம் கோட்ட மேலாளரை நேரில் சந்தித்து மனு கொடுத்தார்.

மேலும் ரெயில்வே போர்டில் இருந்து விழா குறித்த தகவல் வந்தவுடன் ரெயில் இயக்கப்படும் என்று கோட்ட மேலாளர் சுஜாதா அறிவித்தார். இந்த நிலையில் சேலம்-கரூர் ரெயில் பாதையில் வருகிற 25-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் சுஜாதா கூறியதாவது:-

வருகிற 25-ம்தேதி காலை 10.30 மணிக்கு சேலம் - கரூர் அகல ரெயில்பாதையில் பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த விழாவில் அமைச்சர்கள், அதிகாரிகள் எம்.,பி, எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். அன்று 7 பெட்டிகளுடன் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து பயணிகள் ரெயில் புறப்படும்.

இதுபோல் கரூரில் இருந்து சேலத்திற்கு அதே நேரத்தில் பயணிகள் ரெயில் புறப்படும். 26-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் ரெயில் சேவை நிறுத்தப்படும். மறுநாள் முதல் ரெயில் தொடர்ந்து இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். சேலம் - கரூருக்கு கட்டணம் எவ்வளவு என அதிகாரிகளிடம் கேட்டதற்கு, விரைவில் கட்டணம் விவரம் அறிவிக்கப்படும் என தெரிவித்தனர்.