Indian Railways News => Topic started by riteshexpert on Sep 09, 2012 - 21:00:58 PM


Title - Disruption of Train services in Chennai.
Posted by : riteshexpert on Sep 09, 2012 - 21:00:58 PM

தமிழகம் முழுவதும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. சென்னை மற்றும் புற நகர் பகுதியிலும் விடிய விடிய மழை பெய்ததால் எக்ஸ்பிரஸ், மின்சார ரெயில் கள் சிக்னலில் கோளாறு ஏற்பட்டது.

தாம்பரம்- பல்லாவரத்திற்கு இடையே அதிகாலை 5.15 மணியளவில் சிக்னல் இயங்கவில்லை. மழைநீர் கேபிளில் புகுந்ததால் சிக்னல் செயல் இழந்தது. இதனால் ரெயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதிகாலை 5 மணியில் இருந்து சென்னை எழும் பூருக்கு தென்மாவட்டங்களில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஒவ்வொன்றாக வந்து சேரும். இந்த சிக்னல் கோளாறால் தென் மாவட்டத்தில் இருந்து வந்த ரெயில்கள் அனைத்தும் வழியில் நிறுத்தப்பட்டன. சிக்னல் பழுதை சரிபார்க்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆனால் அவற்றை உடனே சரிசெய்ய முடியவில்லை. இதனால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 2 மணி நேரம் தாமதமாக எழும்பூர் வந்து சேர்ந்தன. காலை 5.35 மணிக்கு வந்து சேர வேண்டிய பாண்டியன் 7.30 மணிக்கு வந்து சேர்ந்தது.

அதையடுத்து நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியா குமரி, பொதிகை, முத்துநகர், அனந்த புரி, ராமேஸ்வரம், மங்களூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரெயில்களிலும் காலதாமதத்துடன் வந்து சேர்ந்தன. இதனால் ரெயில் பயணிகள் அவதிப்பட்டுள்ளனர்.

இதேபோல சிக்னல் கோளாறு மின்சார ரெயில் சேவையையும் முற்றிலும் பாதித்தது. கடற்கரை- தாம்பரம், தாம்பரம்- கடற்பரை இடையே மின்சார ரெயில் சேவை அதிகாலை முதல் பாதித்தன.

இதனால் மின்சார ரெயில் களின் வேகத்தை குறைத்து இயக்குமாறு டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அனைத்து மின்சார ரெயில்களும் ஒன்றின்பின் ஒன்றாக மிதமான வேகத்தில் இயக்கப்பட்டன.

மின்சார ரெயில்கள் குறித்த நேரத்திற்கு ரெயில் நிலையங்களுக்கு வராததால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். தனியார் கம்பெனி, தொழிற்சாலை, பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியக் கூடிய ஊழியர்கள், பெண்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். சிக்னல் கோளாறு காரணமாக எல்லா மின்சார ரெயில்களும் அளவுக்கு அதிகமான கூட்டம் காணப்பட்டது.

மின்சார ரெயில்கள் தாமதமாக வந்ததால் சிலர் பஸ், ஆட்டோக்களில் ஏறி பயணத்தை தொடர்ந்தனர். சிக்னல் கோளாறு காலை 10 மணி வரை சரி செய்யப்படாததால் 5 மணி நேரம் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது.  இதனால் வழக்கமான நேரத்தில் மின்சார ரெயில்கள் ஓட்ட இயலவில்லை. சில சேவைகள் ரத்து செய்யப்பட்டன.